எம்.பி.பி.எஸ்., சீட் பெற போலி ஆவணம் என்.ஆர்.ஐ., மாணவர்கள் 44 பேர் மீது வழக்கு
புதுச்சேரி: சென்டாக் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களை பெற போலி ஆவணம் சமர்ப்பித்த 44 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை துவக்கி உள்ளனர்.புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் 3 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இந்த 15 சதவீத இடங்கள் ஆண்டு தோறும் போலி சான்றிதழ் அளித்து அபகரிக்கப்பட்டு வருவதாக பெற்றோர் சங்கங்கள் புகார் தெரிவித்து வந்தன.இந்தாண்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் 22 இடங்கள், பிம்ஸ் 18, வெங்கடேஸ்வரா 38, மணக்குள விநாயகர் கல்லுாரியில் 38 என மொத்தம் 116 இடங்கள் என்.ஆர்.ஐ. , பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.சென்டாக் நடத்திய மூன்றாம் கட்ட கலந்தாய்வில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் , அவர்களின் ஆவணங்களை சென்டாக் ஆய்வு செய்தது.என்.ஆர்.ஐ., இடம் பெற துாதரகம் அளித்த சான்றிதழில் அதிகாரிகளின் கையெழுத்து மாறி இருந்ததால், அனைத்து என்.ஆர்.ஐ., மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வுக்காக அந்தந்த நாட்டின் துாதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதில், 44 பேர் போலி சான்றிதழ் கொடுத்து சீட் பெற்றது தெரிய வந்ததை தொடர்ந்து, 44 பேருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை சென்டாக் ரத்து செய்தது.மேலும், போலி ஆவணம் சமர்பித்த 44 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ெஷரில் லாஸ்பேட்டை போலீசில் கடந்த 7ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில், 44 பேர் மீதும், போலி ஆவணம் தயாரித்தல், அதனை உண்மை என சமர்பித்தல் ஆகிய பிரிவுகள் கீழ் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கி உள்ளனர்.