தனியார் பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
பாகூர்: டைமிங் பிரச்னை முன் விரோதம் காரணமாக, தனியார் பஸ் ஊழியர்களை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுார் - கள்ளக்குறிச்சி வழித்தடத்தில் இயங்கி வரும் தனியார் பஸ்சில், கள்ளக்குறிச்சி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (எ) சூர்யா 30; டிரைவராகவும், பட்டாம்பாக்கம் அடுத்துள்ள பி.என்.பாளையத்தை சேர்ந்த சஞ்சய் 22; நடத்துனராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும், மற்றொரு தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே, கடந்த 30ம் தேதி கடலுார் பஸ் நிலையத்தில் டைமிங் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருப்பாதிரிபுலியூர் போலீசார், இருதரப்பினரையும் அழைத்து விசாரனை நடத்தி, சமாதானம் பேசி அனுப்பி இருந்தனர். இந்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், பஸ்சை நிறுத்தி விட்டு, டிரைவர் விக்னேஸ்வரன், நடத்துனர் சஞ்சய் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மற்றொரு தனியார் பஸ் ஊழியர்களான, பண்ருட்டி அடுத்த விசூரை சேர்ந்த ராஜ்குமார், கடலுார் மார்க்கெட் காலனியை சேர்ந்த செல்வநாதன், கோபி ஆகியோர் முன்விரோதத்தால் துாங்கி கொண்டிருந்த விக்னேஸ்வரனையும், சஞ்சையையும் இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதில், படுகாயம் அடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, தனியார் பஸ் நிறுவன மேலாளர் கனகராஜ், கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.