வேறொருவர் இடத்தை விற்ற 3 பேர் மீது வழக்குப் பதிவு
வில்லியனுார் : வில்லியனுார் அருகே வேறொருவரின் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்த சகோதரிகள் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வில்லியனுார் அடுத்த முத்துப்பிள்ளைபாளையம் பகுதியில் விஜயகணபதி நகர் உள்ளது. இந்த மனை பிரிவில் 25க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த மனைப் பிரிவில் வசிக்கும் மோகன் என்பவர் அப்புருவல் பெறவதற்காக சென்றபோது அவர் வாங்கிய இடம் வேறொருவர் பெயரில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து தன்னிடம் மனை விற்பனை செய்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மோகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஆணை பெற்றார். கோர்ட்டு உத்தரவின் பேரில் முதலியார்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி செல்வி, இவரின் தங்கை மங்காவரம் ஆகியோர் மீது வில்லியனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில், முத்துப்பிள்ளைபாளையம் விஜயகணபதி நகரில், இறந்துபோன ராஜாராம் என்பவருக்கு சொந்தமான ஒரு பகுதி இடத்தை, அவரது வாரிசு என போலி பத்திரம் தயாரித்து கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் மனைகளாக பிரித்து சிலரிடம் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.