மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம்
பாகூர் : பணியின் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, முதல்வர் ரங்கசாமி 2 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கினார். பாகூர் தொகுதி குருவிநத்தம் தெற்கு வீதியை சேர்ந்த ராஜதுரை 32; எலக்ட்ரீஷியன். இவருக்கு, சாந்திபிரியா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். ராஜதுரை கடந்த மார்ச் மாதம், பணியின் போது, மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார். கணவனை இழந்த நிலையில், தனது குழந்தையுடன் ஏழ்மையில் வசித்து வரும் சாந்திபிரியா, தனக்கு நிவாரண உதவி வழங்கி உதவி செய்திடுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். அதன் பேரில், முதல்வர் ரங்கசாமி, தனது நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை,சாந்திபிரியாவிடம் வழங்கினார்.துணை சபாநாயகர் ராஜவேலு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.