கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஒப்பந்த பணி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி; சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:சுகாதாரத் துறையில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் கொரோனா காலத்தில் 256 செவிலியர்கள் பணியாற்றினார்கள். 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 256 கொரோனா கால செவிலியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து ஒப்பந்த பணியை பணி நீட்டிப்பு செய்யக் கோரி புதுச்சேரி அரசை வலியுறுத்தினர். இருந்தும் புதுச்சேரி அரசு அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி வழங்காத காரணத்தால் அவர்கள் சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சென்றனர்.அதில் புதுச்சேரி அரசு இவர்களுக்கு பணி வழங்க பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் சென்று தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவரை எதிர்பார்க்காமல் புதுச்சேரி அரசு கொரோனா காலத்தில் யாரும் பணிக்கு வராத நேரத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய 256 செவிலியர்களுக்கு தொகுப்பூதியத்தில் மீண்டும் பணி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதே கருத்தை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாக தியாகராஜன் ஆகியோரும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவித்தார்.