தமிழில் பெயர் பலகை வைக்க முதல்வர் ரங்கசாமி உத்தரவு
புதுச்சேரி : புதுச்சேரியில் வர்த்தக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகின்றது. நேற்றைய கூட்டத்தில் பூஜ்ய நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு பேசியதாவது:பல்வேறு மாநிலங்களில் தாய்மொழி எழுத்துக்களில் தான் வணிக நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் வாசகங்கள் இடம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக நகராட்சிகளில் கூட, தமிழ்மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்களில் தாய்மொழி இடம் பெறுவது அரிதாகிவிட்டது.தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக புதுச்சேரி, காரைக்காலில் செயல்படும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கடுத்து தான் பிறமொழி வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும். இதனை பின்பற்றாத கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பிறப்பித்த உத்தரவு:புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருப்பது கட்டாயம். அந்த பெயர் பலகையில் தமிழ் மொழியின் எழுத்து பெரிதாக இருக்க வேண்டும். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து என்பதே இல்லை. இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். புதுச்சேரியில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள் தாய்மொழியான தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும்.அதை உணர்வு பூர்வமாக தாங்களே முன் வந்து செய்ய வேண்டும். அரசும் தமிழில் பெயர் பலகை வைக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். கடந்த காலங்களில் இது முறையாக இருந்தது. இப்போது அது மாறி உள்ளது. அது மீண்டும் கொண்டு வரப்படும். அரசு விழா அழைப்பிதழ்களையும் தமிழில் தான் அச்சடிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.