ரேஷன் கடைகளில் இன்று அரிசி, சர்க்கரை வழங்கல் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து, இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று துவக்கி வைக்கிறார்.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், முதல்வர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அவர்களிடம், ரேஷன்கடைகளை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் கூட்டத்தில், விரைவாக ரேஷன் கடைகள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ரேஷன் கடை திறப்பதற்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து தீபாவளி பரிசாக, அனைத்து அட்டைதாரர்களுக்கும், 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை, இன்று முதல் ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில் ரேஷன் கடை திறப்பு விழா மற்றும் தீபாவளியை முன்னிட்டு, இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று மாலை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடக்கிறது.நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, ரேஷன் கடையை திறந்து வைத்து இலவச அரிசி, சர்க்கரையை பொதுமக்களுக்கு வழங்க உள்ளார்.இதில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், சிவசங்கர், தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.