அபாயகரமாக மாறிய சிறுவர் விளையாட்டு சாதனங்கள்; பாரதி பூங்காவில் அவலம்
புதுச்சேரி: பாரதி பூங்காவில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து அலங்கோலமாக காட்சி அளிப்பதுடன், ஆபத்தான கருவிகளாக மாறி உள்ளது.புதுச்சேரி கவர்னர் மாளிகை, சட்டசபை எதிரில் பாரதி பூங்கா அமைந்துள்ளது. நகரின் முக்கியமான பொழுது போக்கு இடமாக பாரதி பூங்கா இருக்கிறது. நகரின் நடுவில் உள்ள பூங்காவில் காலை, மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.பகல் நேரத்தில் குழந்தைகளுடன் மக்கள் பொழுதை கழிக்கின்றனர். குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சீசா, சறுக்கு, சிறு குளம், தொங்கு பாலம் என, ஏராளமான விளையாட்டு சாதனங்கள் உள்ளன. குழந்தைகள் ஆர்வமுடன் விளையாடுவர்.இந்த விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் உடைந்து அலங்கோலமாக கிடக்கிறது. ஊஞ்சலில் சங்கிலி அறுந்து கிடக்கிறது. சறுக்கு விளையாட்டில், ராட்சத ஓட்டை விழுந்துள்ளது. விளையாட்டு சாதனங்கள் துருபிடித்து உடைந்து கிடக்கிறது.சறுக்கு விடும் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதனால் பூங்கா வரும் சிறுவர்கள் விளையாட்டு சாதனங்களில் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். குழந்தைகள் விளையாட்டு சாதனங்களையும் புதிதாக அமைக்க அரசு முன்வர வேண்டும்.குழந்தைகள் விளையாடும் சாதனங்களில், பள்ளி கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களும் விளையாடும்போது அவை உடைந்து விடுகிறது. எனவே, சிறுவர் விளையாட்டு சாதனங்களை கண்காணிக்க தனி நபரை நியமித்தால் சாதனங்கள் சேதம் அடைவது தடுக்க முடியும்.