முதல்வர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
புதுச்சேரி : தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.டி.சி., ஊழியர்களுடன் முதல்வர் ரங்கசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, நேற்று மதியம் முதல் அரசு பஸ்கள் இயங்க துவங்கின. புதுச்சேரி பி.ஆர்.டி.சி.,யில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 28ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நான்கு கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் போராட்டம் தொடர்ந்தது. நேற்று முன்தினம் 11வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் எஸ்மா சட்டம் பாயும் என, பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரித்தது. இருப்பினும், நேற்று 12வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த ஊழியர்களுடன் முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எதிர்கட்சித் தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ., அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் சிவக்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளம் ரூ. 16 ஆயிரத்து 786ல் இருந்து கூடுதலாக 10 ஆயிரம் உயர்த்தி, ரூ. 26 ஆயிரத்து 786 வழங்கப்படும். நிரந்தர ஊழியர்களுக்கு பஞ்சப்படி முதற்கட்டமாக 25 சதவீதமும், பின் படிப்படியாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பி.ஆர்.டி.சி., ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று, நேற்று மதியம் 2:30 மணி முதல் பணிமனையில் இருந்து அரசு பஸ்களை இயக்க துவங்கினர்.