ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டு பதிவு நடக்கிறது. இதனையொட்டி, தேர்தல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தினை, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளை பார்வையிட்ட அவர், அங்கு சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஓட்டு எண்ணும் மையத்தில், போதிய அளவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் சுதாகர் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.