பொதுத்தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
வில்லியனுார்: வில்லியனுார் கொம்யூன் தன்னார்வல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், கொம்யூனை சேர்ந்த மங்கலம், வில்லியனுார் மற்றும் ஊசுடு ஆகிய தொகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 20 பள்ளிகளை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வில்லியனுார் அரசு ஆண்கள் துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த சாதனை மாணவர்கள் 62 பேருக்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலா ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கேடயம், திருக்குறள் புத்தகம் ஆகியவற்றை பரிசாக வழங்கினார். சாதனை மாணவர்களை உருவாக்கிய பள்ளி ஆசிரியர்களையும் கவுரவபடுத்தினார்.
Galleryவில்லியனுார் பகுதியில் சமூக சேவை புரிந்து சாதனை படைத்த 15க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆறுமுகம், மீனாட்சி சுந்தரம், அருள்ஜோதி, சமூக ஆர்வலர்கள் ராமன், கலியமுருகன், பரசுராமன், ரஜினிமுருகன், கல்வித்துறை குலசேகரன், திருவரசன், புவியரசன் உட்பட பலர் பங்கேற்றனர். காதர்மொய்தீன் நன்றி கூறினார்.