காங்., இன்று ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: காங்., புதுச்சேரி மாநில தலைவர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் எவ்வித பயனும் அளிக்காது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் அறிவிப்பு இல்லை. எனவே, இளைஞர்களின் விரோத பட்ஜெட்டாக உள்ளது.அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை, மனித மாண்புகளை புறந்தள்ளி கை, கால் விலங்கிட்டு இழிவு படுத்தியும், கொடுமை படுத்திய செயல் நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு குரல் எழுப்ப தவறிவிட்டது.இலங்கை கடற்படையால் காரைக்காலை சேர்ந்த இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு வாய் திறக்கவில்லை.இப்பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, இன்று (8ம் தேதி) காலை 9:30 மணியளவில் மிஷன் வீதி மாதா கோவில் அருகே, புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டி, இளைஞர் காங்., மகிளா காங்., மற்றும் மாணவர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.