பிறவிக்கால பாத குறைபாடு : ஜிப்மரில் சிறப்பு பயிலரங்கு
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்கால பாத குறைபாட்டுக்கான சிகிச்சை குறித்த செயல்முறை பயிலரங்கம் நடந்தது. பிறவிக்கால பாத நோயான 'கிளப்-பூட்' உலகளவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இந்த குறைபாட்டுக்கான சிகிச்சை “பொன்செட்டி முறை”ஆகும். அறுவைச் சிகிச்சை இல்லாமல் பிளாஸ்டர் போடுவதன் மூலம் செய்யப்படும் இந்த முறையில், குழந்தையின் பாதை நிலையை 6 அல்லது 7 வாரங்களில் திருத்திவிட முடியும். பிளாஸ்டர் சிகிச்சைக்கு பிறகு, குழந்தைகள் 4 முதல் 5 வயது வரையிலும் சிறப்பு காலணிகள் மற்றும் பட்டைகளை அணிய வேண்டும். அதனை முறையாக பின்பற்றாவிட்டால், பாத குறைபாடு மீண்டும் தோன்றி மீண்டும் பிளாஸ்டர் போடுதல் அல்லது சிறிய அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். இந்நோயிற்கான சிகிச்சை குறித்து, ஜிப்மர் மருத்துவமனை எலும்பியல் அறுவைச் சிகிச்சை துறை சார்பில் மருத்துவக் கல்வி செயல்முறை பட்டறையை நடத்தியது. அதில், 42 முதுகலை மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். 'பொன்செட்டி' முறையின் நடைமுறைப் பயிற்சிகள் குறித்து கற்பிக்கப்பட்டன. பிளாஸ்டர் சிகிச்சைக்குப் பிறகு தொடர்ச்சியான பட்டை அணிதல் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பயிற்சி வலியுறுத்தியது. இந்த சிகிச்சை முறை, ஜிப்மர் மருத்துவமனை எலும்பியல் அறுவைச் சிகிச்சை துறையில், புதன்கிழமை தோறும் அளிக்கப்படுகிறது. இந்த பயிலரங்கு ஜிப்மர் மருத்துவமனை எலும்பியல் துறை தலைவர் சுரேஷ்காந்தி, டாக்டர் ராகவேந்திரா ஆகியோர் தலைமையில் நடந்தது.