நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி: பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், விவசாய நீர்பாசனம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான ஆலோசனை கூட்டம் சட்டசபையில் நடந்தது. கூட்டத்தில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், நீர்ப்பாசன செயற்கோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் திட்டம் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர்கள் செல்வராசு, மதிவாணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வில்லியனுார் சங்கராபரணி ஆறு, தமிழக பகுதி தென்பெண்ணை ஆறு இணைக்கும் திட்டத்தின் மூலம், சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் தென்பெண்ணை ஆற்று வழியாக சங்கராபரணி ஆற்றின் மூலம் ஊசுட்டேரிக்கு வருவதற்கு முந்தைய காலங்களில் வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனை சரியான முறையில் பராமரிக்காததால் சில ஆண்டுகளாக சாத்தனுார் அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இந்த நீரை சங்கராபரணி ஆற்றின் வழியாக ஊசுட்டேரிக்கு கொண்டு வர வேண்டும், இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும், நிலத்தடி நீர்மட்டம் பெருகும், இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேளாண் துறை அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.