விமான துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.11.50 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
பாகூர் : விமான துறையில் வேலை வாங்கி தருவதாக 11.50 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை கே.கே., நகரை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி பிரபாவதி, 47. இவர், பாகூர் அடுத்த மணமேடு கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மளிகை கடை நடத்தினார். அப்போது, காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த வேல்முருகன், அவரது மனைவி திவ்யபாரதி ஆகியோர், மணமேட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்து சென்ற போது, பிரபாவதிக்கு அறிமுகமாகினர்.வேல்முருகன் தான் தேசிய வங்கி ஒன்றில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், விமான துறையில் வேலை இருக்கிறது.3 லட்சம் ரூபாய் கொடுத்தால், வேலை வாங்கி தருவதாக கூறினார். அவரது மனைவி திவ்யபாரதியும், தனது கணவர் பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக பிரபாவதியிடம் தெரிவித்தார். இதனை நம்பிய பிரபாவதி தனது மகன், மகளுக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரினார்.இதையடுத்து, வேல்முருகன், சென்னை, கோயம்புத்துார், பெங்களூரு, கேரளா, ஹைதரபாத் உள்ளிட்ட ஊர்களில் இன்டர்வியூ நடப்பதாக அழைத்து சென்று, அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறி, பல தவணைகளாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளார்.ஆனால், அவர் கூறிய படி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது, மிரட்டல் விடுத்தார்.இது தொடர்பாக, பிரபாவதி கடந்த சில மாதங்களுக்கு முன், புதுச்சேரி போலீஸ் சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் பாகூர் போலீஸ் நிலையத்தில், நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பங்கேற்று, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திடம் முறையிட்டார்.இது தொடர்பாக, வழக்குப் பதிந்து விசாரணை நடத்திட டி.ஐ.ஜி., பாகூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், கரையாம்புத்துார் புறக்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் குமார், காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த வேல்முருகன், அவரது மனைவி திவ்யபாரதி ஆகியோர் மீது மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இரண்டு தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், இந்த தம்பதி, புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.