உரிமம் இல்லாத சொத்தை ரூ.3 கோடிக்கு விற்று மோசடி 5 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வலை
புதுச்சேரி: உரிமம் இல்லாத சொத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடிக்கு விற்று மோசடி செய்த 5 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரகு. இவர், கடந்த 2024ம் ஆண்டு புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவில் உள்ள 4,650 சதுர அடி இடத்தை, வைசியாள் வீதியை சேர்ந்த குருமூர்த்தியிடம் இருந்து ரூ.3 கோடிக்கு தனது மனைவி அம்பிகா பெயருக்கு கிரயம் வாங்கினார். இந்நிலையில், அந்த இடத்தை முத்தியால்பேட்டையை சேர்ந்த அஸ்வின் சுந்தர் மற்றும் அனுராஜ் ஆகியோர் உரிமை கோரி அதற்கான கோர்ட் உத்தரவு மற்றும் பதிவு ஆவணங்களை காண்பித்தனர். திடுக்கிட்ட ரகு விசாரித்தபோது, தான் வாங்கிய இடம், தனக்கு விற்ற குருமூர்த்தியின் தாத்தா நடேசனுக்கு சொந்தம் என்பதும், அவர் அந்த இடத்தை கடந்த 1976ம் ஆண்டு சோமசுந்தரம் மற்றும் அவரது மகன் ராஜி ஆகியோருக்கு விற்க முடிவு செய்து ரூ.10 ஆயிரம் முன் பணம் வாங்கியுள்ளார். ஆனால், இடத்தை கிரயம் செய்யாததால், இது தொடர்பாக இரு தரப்பிற்கு இடையே கோர்ட்டில் வழக்கு நடந்தது. அதில் வந்த தீர்ப்பை, சோமசுந்தரம் வாரிசுகள் நிறைவேற்று மனு தாக்கல் செய்து, சொத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளனர். இதனை நடேசனின் பேரனான குருமூர்த்தி மறைத்து, அவரது சகோதாரர்கள் மற்றும் சகோதரியும் கூட்டு சேர்ந்து போலியான விடுதலை பத்திரம் தயாரித்து சொத்தை தனது மனைவிக்கு விற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து ரகு நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், குருமூர்த்தி, அவரது சகோதரர்கள் மகேந்திரன், சீனிவாசன், ரமேஷ் மற்றும் சகோதரி ராஜேஸ்வரி ஆகியோர் மீது போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகி ன்றனர்.