போலி இணையதளத்தில் கிரிக்கெட் போட்டிl; டிக்கெட் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
புதுச்சேரி : இந்தியா - இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கு, போலி இணையதளம் உருவாக்கி டிக்கெட் விற்பனை செய்த மோசடி கும்பல் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இரு அணிகளுக்கு இடையே வரும் 22ம் தேதி முதல் பிப்., 12ம் தேதி வரை, 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 தொடரின் இரண்டாவது போட்டி, சென்னையில் 25ம் தேதி நடக்கிறது. இப்போட்டியை நேரில் காண, புதுச்சேரி தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரைச் சேர்ந்த சக்தி சமூக வலைதளத்தில், bookcricketicket.co.inலிங்க்கில் டிக்கெட் எடுத்தார்.இணையதள முகவரியில் மூன்று பேருக்கு டிக்கெட் எடுக்க, அதற்கான தொகை, 6,360 ரூபாய் செலுத்தினார். ஆனால், புக்கிங் ஆன டிக்கெட் ஏதும் வரவில்லை. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.விசாரணையில், சைபர் கிரைம் மோசடி கும்பல் கிரிக்கெட் போட்டிக்கான போலியாக டிக்கெட் புக்கிங் இணையதள பக்கத்தை உருவாக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என, விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'சமூக வலைதளத்தில் வரும் அங்கீகாரம் இல்லாத இணையதளம் வழியாக டிக்கெட் புக்கிங் செய்யக்கூடாது. டிக்கெட் புக் செய்யும் போலி இணையதளத்தை முடக்கம் செய்ய கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.