ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி பணம் கேட்டால் நம்ப வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரி: ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி பணம் கேட்டால், நம்ப வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார், பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த சில தினங்களாக இளைஞர்கள் மற்றும் ஆண்களை குறிவைத்து, நீங்கள் குழந்தைகளுடைய ஆபாச படம் ஆன்லைன் வழியாக பார்த்து உள்ளீர்கள். பதிவிறக்கம் செய்துள்ளீர்கள். குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளீர்கள் எனவும், அது சைபர் கிரைம் சட்டத்தின்படி குற்றமாகும்.ஆகவே, உங்கள் மீது சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிலிருந்து உங்களை விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறி, சைபர் மோசடி கும்பல் தற்போது பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.இதுதொடர்பாக, 5க்கும் மேற்பட்ட புகார்கள் இதுவரையில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. இதுபோல் யாரேனும் தொடர்பு கொண்டு பேசினால், உண்மையான காவல் துறையினர் தானா என்பதை சைபர் கிரைம் நிலைய தொலைபேசி எண் 1930 மற்றும் 0413-2276144, 9489205246 எண்ணை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.மேலும், சைபர் கிரைம் மோசடிக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.