ரயில்வே திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு அரசு செயலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரியின் ரயில்வே திட்டங்களில் கவனம் செலுத்த கூடுதல் பொறுப்பாக அரசு செயலர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்துள்ளது.புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பாரம்பரிய கட்டிடங்கள், அழகிய கடற்கரை, படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில் தொடங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தர, விடுதிகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிக தேடப்படும் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கான ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. இந்த நிலையில், புதுச்சேரியின் ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. ரயில்வே திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் வகையில் வேளாண் துறை செயலர் நெடுஞ்செழியனுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார். அரசு செயலர்களுக்கு ரயில்வே திட்ட பொறுப்பு இதுவரை வழங்கப்பட்டதில்லை.தென்னக ரயில்வே தான் ரயில்வே மேம்பாட்டு பணிகளை கவனித்து வருகின்றது. இப்போது முதன் முறையாக புதுச்சேரியில் ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு, தனியாக அரசு செயலரை நியமித்து பொறுப்பினை ஒப்படைத்துள்ளது. புதுச்சேரி கல்வி கேந்திரமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்Y வருகின்றனர். எனவே புதுச்சேரியில் இருந்து ரயில்வே வழித்தடங்களில் புதிய ரயில் விடுவது தொடர்பாக முதற்கட்டமாக ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்னணியில் கவர்னர்
கடந்த சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி ரயில்வே நிலையத்தை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டு ஆய்வு நடத்தி இருந்தார். அப்போது புதிய ரயில்வே திட்ட மேம்பாட்டு பணிகளில் மாநிலத்தில் தனியாக ஒருங்கிணைப்பு ஏதும் இல்லை என்பதை கண்டறிந்தார். அதை தொடர்ந்து கவர்னரின் உத்தரவின்படி, புதுச்சேரியின் ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தனியாக அரசு செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.