உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ சேவை தொழில் மட்டுமல்ல மனித குலத்திற்கான அர்ப்பணிப்பு: ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு

மருத்துவ சேவை தொழில் மட்டுமல்ல மனித குலத்திற்கான அர்ப்பணிப்பு: ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு

புதுச்சேரி: ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களின் சாமானிய மக்களின் நம்பிக்கையின் சின்னமாக ஜிப்மர் விளங்குகிறது. சமூக சுகாதார சேவைகளில் இதன் பங்கு, உலகளாவிய மருத்துவ சேவைகளின் வரைபடத்தில் புதுச்சேரிக்கு முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. புதுச்சேரியின் சுகாதாரக் குறியீடுகளை இது உயர்த்தியுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் ஜிப்மர் முன்னணியில் உள்ளது. தகுதியுள்ள குடும்பங்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. ஜிப்மர் நிறுவனத்தின் அறிவு, திறன்கள் மற்றும் விழுமியங்களைச் சுமந்துகொண்டு,மருத்துவ மாணவர்கள் மருத்துவத் துறை வல்லுநர்களாக ஒரு புதிய பயணத்தைத் தொடங்க உள்ளனர். மருத்துவ மாணவர்கள் தொழில்முறை உலகிற்குள் அடியெடுத்து வைக்கும்போது, மருத்துவ சேவை என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; அது மனிதகுலத்திற்கான அர்ப்பணிப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பின்தங்கிய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், தேவைப்படுவோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். மருத்துவ மாணவர்களின் சாதனைகள் நம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் குறித்து இந்தியா பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. அந்த எதிர்பார்ப்புகளை மருத்துவ மாணவர்கள் பொறுப்பை ஏற்று, ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை