அமைச்சர் மீது அவதுாறு போஸ்டர் என்.ஆர். காங்.,போலீஸ்டேஷன் முற்றுகை
புதுச்சேரி: பொதுப்பணித்துறை அமைச்சர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, என்.ஆர். காங்., கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உட்பட 3 பேரை லஞ்ச வழக்கில் சி.பி.ஐ., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கைது சம்பவத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பெயரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி முழுதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட என்.ஆர். காங்., கட்சியினர், நேற்று காலை பெருமாள் கோவில் வீதியில் இருந்து நேரு வீதி வழியாக பேரணியாக சென்று, பெரியகடை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு , இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில், அவதுாறு போஸ்டர் ஒட்டி அமைச்சருக்கு கலங்கம் ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பின், போலீஸ் ஸ்டேஷன் எதிரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கட்சியினர் கிழித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.