மதகடிப்பட்டு-திருக்கனுார் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
திருபுவனை : மதகடிப்பட்டு-திருக்கனுார் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.புதுச்சேரி முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகாரிகள் அகற்றிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி -மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் இருந்து திருக்கனுார் செல்லும் சாலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து நவ. 22 ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி நேற்று தாசில்தார் சரவணன், ஆய்வாளர் ஜெயபாலாஜி, வி.ஏ.ஓ.,க்கள் ஜெயபாலாஜி, ஜெகதீஸ்வரி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தமிழரசன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் முன்லையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.இதில் மதகடிப்பட்டு மேம்பாலத்தில் துவங்கி திருக்கனுார் சாலையில் கலிதீர்த்தாள்குப்பம் கிராமம் வரை பொக்லைன் மூலம் ஆக்கிரிமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டது. திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.