| ADDED : டிச 10, 2025 05:25 AM
புதுச்சேரி: விவசாயிகள் நலத்துறை சார்பில், உயிர் வேலி மூலம் விவசாய பயிர்களை பாதுகாக்கும் செயல்விளக்கம் சிலுக்காரிப்பாளையம் கிராமத்தில் நடந்தது. புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டம் சார்பில், உயிர் வேலி வளர்த்து அதன் மூலம் விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல் குறித்த செயல் விளக்கம் சிலுக்காரிப்பாளையம் கிராமத்தில் நடந்தது. சுப்ரமணி என்பவரது விவசாய நிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் நடராஜன் உயிர்வேலி நடும் முறை மற்றும் பராமரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். மேலும் கலாக்காய்யை உயிர்வேலியாய் அமைப்பதனால் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் மற்றும் இதர விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதுடன், இரும்பு வேலிகள் அமைப்பதன் செலவை குறைக்கலாம். கலாக்காய் ஊறுகாய், ஜாம் மற்றும் அடுமனை தயாரிப்புகளுக்கு பயன்படுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்' என்றார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கலாக்காய் நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆத்மா தொழில் நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஷ்வரி, செயல்விளக்க உதவியாளர் ஜெயசங்கர், அலுவலக ஊழியர்கள் சுபாஷ், சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.