பக்தர் தவறவிட்ட நகை ஒப்படைப்பு
பாகூர்: பாகூர் கோவிலில் பக்தர் தவற விட்ட 4 சவரன் தாலி செயினை, கண்டெடுத்து ஒப்படைத்த கட்டுமான தொழிலாளியை, போலீசார் பாராட்டினர். பாகூர், வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. இதில், பாகூர் மட்டுமின்றி கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். அப்போது, கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பாலசுந்தரம் மனைவி கீதா, 33, என்பவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 சவரன் தாலி செயின் மாயமானது. அதிர்ச்சியடைந்த கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் நகையை தேடினர். தகவலறிந்த பாகூர் போலீசார் கோவிலுக்கு சென்று நகையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, பாகூர் மேற்கு வீதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ரவிச்சந்திரன், 58; என்பவர் அந்த செயினை கண்டெடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார், ரவிச்சந்திரனை காவல் நிலையம் அழைத்து சென்று, அவரது நேர்மையை பாராட்டும் விதமாக, சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து, போலீசார் முன்னிலையில் ரவிச்சந்திரன், தாலி செயினை, கீதாவிடம் ஒப்படைத்தார்.