போலீஸ் ஸ்டேஷன் கட்டுமான பணி டி.ஐ.ஜி., ஆய்வு
புதுச்சேரி : இ.சி.ஆர்., மடுவுபேட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் கட்டுமான பணிகளை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் கடந்த 1991ம் ஆண்டு லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டு, பின்னர், போலீஸ் ஸ்டேஷனாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், போதிய வசதி இன்றி, இதுவரையில் குறுகலான வாடகை கட்டடத்தில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.இதையடுத்து, லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு , அரசு இடத்தில் புதிதாக கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மடுவுபேட், இ.சி.ஆரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.இந்நிலையில், லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் கட்டுமான பணிகளை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதற்கு, ஒப்பந்ததாரர் ஒரு மாதத்தில் கட்டுமான பணிகளை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார்.ஆய்வின்போது, லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் அன்சர் பாட்ஷா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.