தினமலர்- பட்டம் இதழ் வினாடி - வினா போட்டி
புதுச்சேரி: தேங்காய்திட்டு ஆச்சார்யா பால சிக்ஷா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், தினமலர் - பட்டம் இதழ் சார்பில் மாணவர்களுக்கான மெகா வினாடி - வினா போட்டி நடந்தது. அதன்படி, முதல்நிலை தகுதி சுற்று போட்டியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் 500 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு, 20 நிமிடங்கள் தேர்வு நடத்தப்பட்டது. அதில், அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல்நிலை தேர்வில் தேர்வு பெற்ற 16 மாணவர்கள், 8 அணிகளாக பிரிக்கப்பட்டு,வினாடி - வினா போட்டி மூன்று சுற்றுகளாக நேற்று நடந்தது. ஒவ்வொரு சுற்றிலும் 8 கேள்விகள் கேட்கப்பட் டன.அதில், 9ம் வகுப்பு மாணவிகள் தானிய சோபியா, காவிய தர்ஷினி முதலிடமும், 8ம் வகுப்பு மாணவர்கள் திருமாலீஸ்வரன், சம்யுக்த் ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்து, இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் முதல்வர் கவிதா தணிகாசலம், துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் பரிசு வழங்கினர்.