உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர். காங்., கட்சிக்கு ஆதரவு இந்திய கம்யூ., திடீர் முடிவு

என்.ஆர். காங்., கட்சிக்கு ஆதரவு இந்திய கம்யூ., திடீர் முடிவு

புதுச்சேரி : இந்திராநகர் இடைத்தேர்தலில் என்.ஆர். காங்., கட்சியை ஆதரிக்க இந்திய கம்யூ., கட்சி முடிவு செய்துள்ளது. புதுச்சேரி இந்திய கம்யூ., செயலாளர் நாரா கலைநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தின் முடிவின்படி இந்திராநகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க., - என்.ஆர்.காங்., தேர்தல் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டது. உடன்பாட்டின் உண்மை தன்மையைப் பற்றி கூட கூட்டணி கட்சியான இந்திய கம்யூ., கட்சிக்குத் தெரியாமல் அ.தி.மு.க., மறைத்துவிட்டது. இதன் காரணமாக இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு கொடுப்பது என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. மாநிலத்தில் நிலையான அரசு அமைந்திடவும், மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படவும் என்.ஆர்.காங்., வேட்பாளரை கூட்டாக இல்லாமல், தனிமேடை அமைத்து பிரசாரம் செய்வது என கட்சி முடிவு செய்துள்ளது. பிரசாரம் செய்வதற்காக சேதுசெல்வம் உள்ளிட்ட 7 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்., அரசு மக்களுக்கு எதிரான நிலை எடுக்கும்பட்சத்தில் இந்திய கம்யூ., கட்சி எதிர்த்து இயக்கம் காண்பது என்று முடிவு செய்துள்ளோம். இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., எங்களிடம் ஆதரவு கேட்காமல் இருந்தது அவரின் அரசியல் அறியாமையை காட்டுகிறது. காங்., கட்சிக்கு எதிரான நிலைப்பாடு என்பது கம்யூ., கட்சியின் நோக்கம் என்பதால் இன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு என்.ஆர். காங்., கட்சிக்கு ஆதரவு தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்