வட்ட அளவிலான போட்டி ஆலோசனைக் கூட்டம்
பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில், வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.புதுச்சேரி கல்வி துறையின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை சார்பில் ஆண்டுதோறும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-26ம் கல்வியாண்டில், வட்டம் 3ல், விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான பொறுப்பு, சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான, ஆலோசனைக் கூட்டம் வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டம் 3ன் தலைவருமான பழனிச்சாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் இணை இயக்குனர் வைத்தியநாதன், ஓய்வுபெற்ற உடற் கல்வி விரிவுரையாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி விரைவுரையாளர்கள் பழனி, குருநாதன், முரளிதரன், நாராயணசாமி ஆகியோர் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து பேசினர். வட்டம் 3ன் அமைப்புச் செயலாளர் உடற்கல்வி விரிவுரையாளர் தணிகைக்குமரன் ஏற்புரையாற்றினார்.உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் தொகுப்புரையாற்றினார். கூட்டத்தில், அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பகுதியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி விரைவுரையாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.