மத்திய அரசின் புயல் நிவாரண நிதி தி.மு.க., - பா.ஜ., - காங்., காரசார விவாதம்
புதுச்சேரி, : புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசுகையில்; புதுச்சேரி மாநில வரி வருவாய் ரூ.7,700 கோடி என்று மதிப்பீடு செய்துள்ளீர்கள்.கடந்த 10 ஆண்டுகள் ஒப்பிடும்போது, நம் வரி வருவாய் 112 சதவீதம் உயர்ந்த மாநில வரி வருவாய் காரணமாக பட்ஜெட் தொகை உயர்ந்தது. மத்திய அரசு 10 ஆண்டு ஒப்பிடும்போது, ரூ.4200 கோடி கொடுக்க வேண்டும். ஆனால், ரூ.3432 கோடி கொடையாக கொடுத்துள்ளது.இதனால், மாநில வரி வருவாய் காரணமாக தான் பட்ஜெட் நிதி உயர்ந்துள்ளதே தவிர மத்திய அரசின் நிதி உதவியால் அல்ல என்றார். கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): மழை நிவாரணமாக மத்திய அரசு ரூ. 83 கோடி கொடுத்துள்ளது. கூடுதல் நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் ரூ. 100 கூட முதியோர் பென்ஷன் உயர்த்தி தரவில்லை. இப்போது ரூ. 1000 பென்ஷன் உயர்த்தி கொடுத்துள்ளோம். மகளிர் உதவித்தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தியுள்ளோம். தமிழகத்தில் ரூ. 2000 மழை நிவாரணம் கொடுத்தார்கள். புதுச்சேரியில் ரூ. 5000 கொடுத்தோம்.நாஜிம் (தி.மு.க.,): மழை நிவாரணத்திற்கு ரூ. 206 கோடி செலவிடப்பட்டது. மத்திய அரசு கொடுத்தது ரூ. 61 கோடி தான். மாநில நிதியில் இருந்து தான் முதல்வர் ரங்கசாமி நிவாரணம் வழங்கி உள்ளார். கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): முதல்வர் ரங்கசாமி தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து நிவாரணம் வழங்கவில்லை. பா.ஜ., கூட்டணி ஆட்சி மூலம் நிவாரணம் வழங்கியுள்ளார். வைத்தியநாதன் (காங்., ): புதுச்சேரி மாநில நிதியில் இருந்து முதல்வர் மழை நிவாரணம் வழங்கினார்.அசோக்பாபு (பா.ஜ.,): பொய் பேசாதீர்கள். மனசாட்சியுடன் பேசுங்கள். துணை சபாநாயகர் ராஜவேலு: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என கூறவில்லை. வழங்கிய நிதி போதவில்லை, கூடுதலாக வழங்கி இருக்கலாம் என கூறுகின்றனர். மத்திய அரசு நிதி கொடுப்பதால் தான் திட்டங்களை செயல்படுத்துகிறோம் என எல்லோருக்கும் தெரியும்.அசோக்பாபு (பா.ஜ.,): முன்னறிவிப்பு இன்றி சாத்தனுார் அணை திறந்ததால் தான் புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு தமிழக அரசு தான் காரணம். இதனை முதல்வர் கூறவில்லை.செந்தில்குமார் (தி.மு.க.,): தமிழகத்தில் அறிவிப்பின்றி அணை திறந்ததால் தான் புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனால் நிவாரணம் தரவில்லை என கூறுவதுபோல் உள்ளது. மழை நிவாரணம், விவசாய நிவாரணம் என ரூ. 206 கோடி செலவிட்டுள்ளனர். இதில், மத்திய அரசு கொடுத்ததாக கூறப்படும் ரூ. 61 கோடி இதுவரை புதுச்சேரிக்கு வரவில்லை. கணக்கில் மட்டுமே உள்ளது.கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): மத்திய அரசு வழங்கிய ரூ. 61 கோடி, பேரிடர் துறைக்கு வழங்கிய ரூ. 22 கோடி என ரூ. 83 கோடி வழங்கியுள்ளதாக கவர்னர், முதல்வர் கூறியுள்ளனர். அப்படி இருக்கும்போது நிதி வாங்காமல் எப்படி விடுவார்கள். வைத்தியநாதன் (காங்.): புயல் வெள்ளம் பாதித்து 4 மாதங்கள் ஆகிறது. இன்று வரை நிவாரண நிதி வரவில்லை. ஆட்சி முடிந்த பிறகு தான் நிதியை கொடுப்பார்களா. அசோக்பாபு, (பா.ஜ.,): மத்திய அரசு நிதி கொடுக்கமாட்டார்கள் என்று சந்தேகப்படுகிறீர்களா. 60 ஆண்டு கால காங்., ஆட்சியில் எல்லாவற்றையும் சுரண்டிவிட்டு சென்றுவிட்டீர்கள். நீங்கள் பேசாதீர்கள். வைத்தியநாதன் (காங்.,): பா.ஜ., நிதி கொடுத்ததா. எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பது உங்கள் வேலை. அசோக்பாபு (பா.ஜ.,): எங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை.கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): காங்., கட்சி விலைக்கு வாங்கவில்லை. என்.ஆர்.காங்., கட்சியில் இருந்து தான் காங்., கட்சிக்கு சென்றீர்கள். வைத்தியநாதன் (காங்.,): இங்குள்ள எல்லோரும் காங்., கட்சியில் இருந்து தான் வேறு கட்சிகளுக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது, பா.ஜ., - தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஒரே நேரத்தில் பேசியதால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சிவா: கல்யாணசுந்தரம் தற்போது பா.ஜ., அவர் எங்கு இருந்து வந்தார் என எல்லோருக்கும் தெரியும். புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம். மத்திய அரசு ஆதரவுடன் கூட்டணியில் உள்ள மாநிலத்தில் பேரிடர் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு உரிய நிவாரணம் கொடுத்து இருந்தால் பெரிய உதவியாக இருந்திருக்கும். ஆனால் மத்திய அரசு கொடுக்கவில்லை. பல துறைகளில் இருந்த நிதியை எடுத்து மக்களுக்கு முதல்வர் கொடுத்துள்ளார். இதில் அரசியல் பேச தேவையில்லை என கூறினார். இவ்வாறு விவாதம் நடந்தது.