பெண் அதிகாரி புகாரில் தி.மு.க., எம்.எல்.ஏ., மீது வழக்கு
தியாகதுருகம்: பெண் அதிகாரி கொடுத்த புகாரில், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர், தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதில், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தனது கடமையை செய்யவிடாமல் தடுத்து, திட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார். அந்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார், பிரிவு 79 பி.என்.எஸ்., (பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்), பிரிவு132 பி.என்.எஸ்., (அரசு அதிகாரியை கடமையை செய்யவிடாமல் தடுப்பது), பிரிவு 151 (2) பி.என்.எஸ்., (மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (4) பிரிவின் கீழ் பொது நிறுவனம் அல்லது தனியார் நிறுவனம் கல்வி நிறுவனங்கள் பணியிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி த.வெ.க., எம்.எல்.ஏ., மீது பெண் கலெக்டர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், நேற்று பெண் அதிகாரி ஒருவர், தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தன்னை மிரட்டியதாக அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.