தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் ரகசிய சந்திப்பு
முதல்வர் ரங்கசாமியை, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ரகசியமாக சந்தித்த சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போதுள்ள கூட்டணியை உறுதி செய்வதற்காக, பா.ஜ., புதுச்சேரி மாநில பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா, சில வாரங்களுக்கு முன் முதல்வரை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் ரங்கசாமி, தேர்தல் நெருக்கத்தில் பார்க்கலாம் எனக் கூறிவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல்வர் ரங்கசாமி, அப்பா பைத்திய சாமி கோவிலில் அமாவாசை பூஜை முடித்துவிட்டு, அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்க்கட்சி தலைவரான சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மயிலாடுதுறை தி.மு.க., மாவட்ட செயலாளரான நிவேதா முருகன் எம்.எல்.ஏ., ஆகியோர், அப்பாசாமி கோவிலுக்கு சென்று, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். எதிரணியை சேர்ந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டாக, முதல்வரை அதுவும், அவர் அரசியல் முடிவுகளை எடுக்கும் அப்பா பைத்திய சாமி கோவிலில் சந்தித்து பேசியது, புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.