கடல் கடலாளிக்கே ஆவணப்படம் வெளியீடு
புதுச்சேரி: புதுச்சேரி மா.கம்யூ., தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில், மீனவர் உரிமை குறித்த 'கடல் கடலாளிக்கே' ஆவணப்பட வெளியீட்டு விழா ஜெயராம் ஓட்டலில் நடந்தது. தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் பொதுசெயலாளர் மலையாளத்தான், புதுவை மாநில அமைப்பாளர் தணிகாசலம் வரவேற்றனர். பொருளாளர் வெங்கடேசன், மாநில முதன்மை செயலாளர் சக்திவேல், மாநில செயலாளர் அருணாசலம் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார். அறிக்கையை ராமசந்திரன் வெளியிட அனைத்து மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் பெற்றனர். மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மாங்கையர்செல்வன் விளக்கவுரையாற்றினார். பிரபாகர் ஏற்புரையாற்றினார். அறிக்கையில் மீனவ கிராமங்களின் 60 சதவீதம் பொதுச்சொத்துக்களே பதியப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 551 ஏக்கர், காரைக்காலில் 175 ஏக்கர் கடற்கரை நிலங்கள் பதியப்படவில்லை. 610 சதுர கடல் மைல் பரப்பளவு கொண்ட மீன்பிடி பகுதிகள் பதியப்படவில்லை. மீனவர்களின் நீண்ட கால குடியிருப்பு தேவைக்கு கடற்கரை நிலங்கள் ஒதுக்கப்படவில்லை என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் மீனவ கிராம பொதுச்சொத்துக்களை பதிவு செய்து பாதுகாக்க வலியுறுத்தி முதல்வரை சந்திக்கவும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களில் பிரசார இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. நித்யா நன்றி கூறினார்.