கடைகளின் பெயர் பலகைகளை உடைக்க வேண்டாம்; நேரு எம்.எல்.ஏ.,
புதுச்சேரி: வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை அடித்து நொறுக்க வேண்டாம் என நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் தமிழுக்காக போராட்டம் நடத்துபவர்கள் நேரடியாக வணிக நிறுவனங்களுக்கு சென்று விளம்பர மற்றும் பெயர் பலகைகளை அடித்து நொறுக்குவது ஏற்புடையதல்ல. தமிழுக்கான இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழ் உணர்வோடு போராடுபவர்களுக்கு அவப்பெயர் ஏற்படும்.ஆகையால், தாய்மொழி தமிழுக்காக போராடுபவர்கள், தமிழ் கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு துறைகளை கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னேடுக்க வேண்டும்.அடுத்து, புதுச்சேரி தமிழ்ச்சங்கம், புதுச்சேரி கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் தலைவர் மற்றும் நிர்வாகிகளைமுதலில் ஒருங்கிணைக்க வேண்டும். அதே போல தமிழ்சங்கம் போன்ற அமைப்புகளில் உள்ளுர் தமிழ் ஆர்வலர்களை உறுப்பினர்களாகஅதிகளவில் இடம் பெற செய்ய வேண்டும். அதன்மூலம் வணிகர் சங்கங்கள், வியாபார நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தி தமிழில் பெயர் பலகைகளைவைக்க வலியுறுத்த வேண்டும்.இதையெல்லாம் முதலில் செய்ய வேண்டுமே தவிர, அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நொறுக்கி சேதப்படுத்துவது வருந்தத்தக்கது. இனி வரும்காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.