உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய தீவிரம்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய தீவிரம்

புதுச்சேரி: வெளிநாட்டில் இருந்து மெயிலில் அனுப்புவது போல் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர்களை கைது செய்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புதுச்சேரி கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு, ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துாதரகம், கலெக்டர் அலுவலகம், பிரபல ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இ- மெயில் மூலம் மர்ம நபர்கள் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.இதில், கவர்னர் மாளிகைக்கு 7 முறையும், ஜிப்மருக்கு 4 முறையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு புதிய இ-மெயில் ஐ.டி.,யில் இருந்து வெளிநாட்டு சர்வர் வழியாக புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுதும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது தெரியவந்துள்ளது.புதுச்சேரி போலீசாருக்கு தொடர்ந்து சவால் விடும் வகையில், வெடிகுண்டு மிரட்டல் வருவதால், அவர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார், தேசிய இணையவழி குற்றப்பதிவு முனையம் உதவியை கேட்டுள்ளார்.இதுகுறித்து ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா கூறுகையில், 'உள்நாட்டில் இருந்தபடியே, வெவ்வேறு நாடுகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் அனுப்புவது போன்று, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதுபுது இ-மெயில் மூலம் அனுப்பி வருகின்றனர். இதனால், அவர்களை கண்டுபிடிக்க தேசிய இணையவழி குற்றப்பதிவு முனையத்தின் உதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர்கள் கைது செய்யப்படுவர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !