பைக் விபத்தில் மூதாட்டி பலி
புதுச்சேரி: வானுார் அடுத்த மாத்துார், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு, 48; கொத்தனார். இவர் கடந்த 7ம் தேதி தனது தாய் சந்திராவை, 70, அழைத்துக் கொண்டு, திருக்காஞ்சியில் உள்ள சித்தி மனோன்மணி இறப்பிற்கு, பைக்கில் (பி.ஒய் 05 ஈசட் 7699) சென்றார். இறுதி சடங்கு முடிந்து, மாலை வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். அரும்பார்த்தபுரம் புதிய மேம்பாலம் அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த பைக், வேலு பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த வேலுவின் தாய் சந்திராவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விபத்து ஏற்படுத்திய பாகூரை சேர்ந்த குகன் மீது வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.