புதுச்சேரியில் 24ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரி: தொழிலாளர் துறையில் வரும் 24ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடக்கின்றது. இது குறித்து தொழிலாளர் துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயணரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 24ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. மணக்குள விநாயகர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், அறுபடை வீடு மருத்துவமனை, வெஸ்ட்மெட் மருத்துவமனை, எல்.எஸ்.இ., பயிற்சி பணியாணை மையம், பி.எம்., அக்கோமோடஷன் நிறுவனம், இன்டெக்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் காலிபணியிடங்களை நிரப்ப உள்ளன. இம்முகாமில் டிப்ளமோ, இளநிலை, பொறியியல், கலை, மருந்தியல், செவிலியர், கணக்கியல், முதுநிலை எம்.பி.ஏ., முடித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது 5 தற்குறிப்பு தகவல்கள், கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதல்கள் அவசியம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.