ஹாலோகிராம் விவகாரம் கலால் துறை விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி மதுக்கடைகளில் ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் இல்லாமல் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தி தொடர்பாக, கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் உள்ள சில மதுக்கடைகளில் ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் இல்லாமல் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக செய்தி வெளியானது. கலால் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் திடீர் சோதனைகளில், ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் இல்லாமல் மதுப்பாட்டில்கள் விற்கப்பட்டதாக அண்மை காலத்தில் எந்தவொரு சம்பவமும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக எந்தப் புகாரும் பெறப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் இல்லாமல் மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவது நிரூபணமானால், அது 1970-ம் ஆண்டு புதுச்சேரி கலால் சட்டம் மற்றும் விதிகளின்படி கடுமையான மீறலாகும். இது, அரசுக்குக் கணிசமான வருவாய் இழப்பையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், இக்குற்றச்சாட்டைத் துறை மிகுந்த தீவிரத்துடனும் எச்சரிக்கையுடனும் அணுகி வருகிறது. கலால் துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில், வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்காமல் இருந்தது மற்றும் அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் ஹாலோகிராம் இல்லாத மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக எந்தச் சம்பவமும் இந்த அலுவலகத்தில் பதிவாகவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.