புதுச்சேரியில் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது: அப்பாவி இளைஞர்களுக்கு குறிவைத்தது அம்பலம்
புதுச்சேரி: 'டூரிசம்' என்ற பெயரில் புதுச்சேரி எல்லையில் இயங்கிய போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.புதுச்சேரி நகரின் பல்வேறு இடங்களில், வெளிநாட்டில் வேலை என்ற கவர்ச்சிகரமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அதில், மலேசியா-வியாட்நாம் நாட்டிற்கு டெலிகாலிங், சூப்பர்வைசர், டிரைவர், ஆபிஸ் பாய் வேலைகளுக்கு ஆட்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். சம்பளம் 45 ஆயிரம் முதல் 66 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இண்டர்வியூக்கு சோ-மூ டூரிசம் என்ற நிறுவனத்தின் இ-மெயில் அல்லது மொபைலில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.இந்த சுவரொட்டியால் சந்தேகமடைந்த சைபர் கிரைம் போலீசார், நேற்று கோரிமேடு எல்லையில் தனியார் வீட்டில் இயங்கிய அந்த நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த 2 பெண் ஊழியர்கள் மற்றும் 2 ஆண் ஊழியர்களிடம் துருவி துருவி விசாரித்தனர்.அவர்கள் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆவதும், மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் தர நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும், மற்றப்படி எதுவும் தெரியாது என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மேல் விசாரணைக்காக 4 பேரையும், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பதிவும் இல்லை
வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் அந்நாட்டு அரசாங்கத்தில் பதிவு செய்த அதிகார பூர்வமான நிறுவனம் மூலம்தான் ஆட்களை தேர்வு செய்வார்கள். அவ்வாறு பதிவு செய்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது சிக்கியுள்ள நிறுவனம் அப்படி பதிவு எதுவும் செய்யவில்லை. இதனால் இது போலி நிறுவனம் என்பது உறுதியாகி உள்ளது. பார்த்ததே கிடையாது
புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் ஊழியர்கள் யாரும், உரிமையாளரை பார்த்தது இல்லை. மொபைல்போன் வழியாகவே பேசி வந்துள்ளனர். சம்பளம் கூட வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். அவர் பேசிய மொபைல் எண்ணும் வேலைக்கு வந்தவர்கள் பெயரில் வாங்கியதும் அம்பலமாகி உள்ளது. 'டூரிசம்' என்ற பெயரில் இந்த நிறுவனத்தை நடத்தியது யார், அவர் யாரையெல்லாம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார் என தீவிர விசாரணை நடந்து வருகிறது. அலட்சியம் வேண்டாம்
புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். இவர்களை குறி வைத்து பணம் பறிக்க பல நிறுவனங்கள் கடை விரித்து கல்லா கட்ட களம் இறங்கியுள்ளன. இதுபோன்ற நிறுவனங்கள் விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது.ஏனெனில் வெளிநாட்டில் நிறைய சம்பளத்தில் வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசைக்காட்டி, லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து, வெளிநாட்டில் ஏதோ ஒரு மோசடி நிறுவனத்திடம் ஆயிரம், இரண்டாயிரம் டாலருக்கு அப்பாவி இளைஞர்களை விற்று விடுகின்றனர். எவ்வளவு தான் பீஸ்
மலேசியா - வியாட்நாம் நாட்டிற்கு நேர்காணல் நடத்திய போலி வேலைவாய்ப்பு நிறுவனம் ரூ. 58 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். முதலில், ஹெல்த் செக்கப்பிற்கு ரூ. 6 ஆயிரம் கட்ட வேண்டும். அதன் பிறகு ரூ.36 ஆயிரம் கட்ட வேண்டும். மீதி பணத்தை மலேசியா, வியட்நாம் நாட்டிற்கு சென்ற பிறகு மீதி தொகை கட்டினால் போதும் என்று சொல்லி, இளைஞர்களை மூளை சலவை செய்துள்ளனர்.வெளிநாட்டு வேலை என்கிற ஆசையில் செல்லும் இளைஞர்களை அங்குள்ள ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி சித்ரவதைக்குள்ளாகி, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தாயகம் திரும்பி வருகின்றனர். எனவே இது போன்ற மோசடி நிறுவனங்களை அரசு தயவு தாட்சண்யம் இன்றி ஒடுக்க வேண்டும்.கோரிமேடு எல்லையில் இயங்கி வந்த வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அதன் ஓனர் சோமு வரவில்லை என்றாலும், அடிக்கடி சிவா என்பவர் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். சிவா பயன்படுத்தி சிம்கார்டை ஆய்வு செய்தபோது, அதுவும் ஊழியர்கள் பெயரில் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.