சவுக்கு பயிருக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து சவுக்கு பயிருக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில், பெஞ்சல் புயல், மழை நிவாரணத்திற்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இரண்டு எக்டேருக்கு தான் நிவாரணம் வழங்க முடியும் என, வேளாண்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். விவசாயிகள் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் புயல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி பகுதியில் சவுக்கை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சவுக்கு பயிருக்கும் புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன், துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், பாஸ்கரன், துணைச் செயலாளர்கள் ஆதிமூலம், பழனி, பகுதி செயலாளர்கள் ஜீவானந்தம், ராஜாராமன், ரங்கசாமி, தீனதயாளன், சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.