வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எதற்கு கொஞ்சமாக கொஞ்சமாக மற்ற உயிரினங்களை கொல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக மனிதனை தவிர எல்லா உயிரினங்களையும் கொண்டு விடுங்கள்
பாகூர்: பாகூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக அடுத்தடுத்து காகங்கள் கூட்டம் கூட்டமாக இறந்து வருவதால், பறவை காய்ச்சல் பீதியால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாம் அன்றாடம், நமது வசிப்பிடங்களுக்கு அருகில் பார்க்கக்கூடிய ஒரு பறவை இனம் காகங்களாகும். மனிதர்களுடன் நெருக்கமாக பழகக் கூடிய பறவைகளில், காகங்களுக்கு தனி இடம் உண்டு. சுற்றுச்சூழல் தூய்மையிலும், ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் காகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகம், கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நகர பகுதிகளில் காகங்கள் கூட்டம் கூட்டமாக மர்மமான முறையில் இறந்து விழுந்தன. இது தொடர்பாக, தமிழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இறந்து கிடந்த காகங்கள் எச்.5.என்.1, என்ற வைரஸ் தொற்று காரணமாக பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, நோய் தடுப்பு, மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையத்தில் ஒரு காகமும், நேற்று முன்தினம் பாகூர் தெற்கு வீதியில் 4 காகங்களும், கிழக்கு வீதியில் ஒரு காகமும் இறந்து கிடந்துள்ளது. அதனை யாரும் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் நேற்று காலை பாகூர் சிவன் கோவில் அருகில் 4 காகங்கள் இறந்து கிடந்தன. மேலும், அப்பகுதியில் இருந்த காகங்கள் சோர்வுடன், பறக்க முடியாமல், தள்ளாடியபடி சுற்றி சுற்றி வந்தன. கடந்த மூன்று நாட்களாக காகங்கள் அடுத்தடுத்து இறந்த வருவதாலும், மேலும், பல காகங்கள் சோர்வுற்ற நிலையில் உள்ளதால், பறவைக் காய்ச்சல் பீதி பாகூர் பகுதி மக்களிடையே காட்டுத் தீயாக பரவியது. இதுபற்றி தகவலறிந்த கால்நடைத்துறை இணை இயக்குநர் மரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று மாலை பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று, பாகூர் சிவன் கோவில் வளாகத்தில் இறந்து கிடந்த காகங்களை உடற்கூறாய்வு செய்தனர். தொடர்ந்து சேகரிக்கப்பட்ட காகங்களின் உடல்களை மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே காகங்கள் எதனால் இறந்தது என்பது தெரிய வரும்.
இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காகங்கள் எங்கேனும் கூட்டமாக இறந்து கிடந்தால் உடனடியாக கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். இறந்து கிடக்கும் காகங்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். இனப்பெருக்கத்திற்காக இடம் பெயர்ந்து வரும் பறவைகளால், பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால், வேட்டையாடி விற்கப்படும் பறவை இறைச்சிகளை உண்பதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.
எதற்கு கொஞ்சமாக கொஞ்சமாக மற்ற உயிரினங்களை கொல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக மனிதனை தவிர எல்லா உயிரினங்களையும் கொண்டு விடுங்கள்