ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு
பாகூர்: கிருமாம்பாக்கம் சின்ன ஏரி துார்ந்துபோன நிலையில், அதில், வண்டல் மண் எடுக்க பர்மிட் வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்டில், ஏரியில் வண்டல் மண் எடுக்கும் போது, முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததால், மண் எடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வண்டல் மண் எடுத்த பள்ளத்தில் இருந்து, புகை வந்தது. அப்பகுதி மக்கள் பார்த்தபோது, வண்டல் மண் எடுத்த பள்ளங்கள் முழுதும் பைபர் கழிவுகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது, வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், ஏரியில் தேங்கும் தண்ணீரில், பைபர் கழிவு பொருட்கள் நீரில் கரைந்து, கால்நடைகள், நீர் வாழ் உயிரினங்கள், பறவைகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக ஏரியில் உள்ள பைபர் கழிவு பொருட்களை அகற்றிட வேண்டும். அதனை கொட்டிய நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.