மணப்பட்டு வனப்பகுதியில் தீ விபத்து
பாகூர் : மணப்பட்டு வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு கிராமத்தில், புதுச்சேரி வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதியில் முந்திரி, நெல்லி, நாவல், பனை, சவுக்கு உள்ளிட்ட 2 லட்சத் திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையிலான மரங்கள் உள்ளன. மேலும், நரி, கீரிப்பிள்ளை, பாம்பு, உடும்பு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது.இந்நிலையில், நேற்று மாலை 6:00 மணியளவில், வனத்தில் சவுக்கு மரங்கள் உள்ள பகுதியில் கீழே கிடந்த சரகுகள் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. அங்கிருந்து புகை வெளியேறியதை கண்டு, அருகில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.