| ADDED : அக் 23, 2025 06:34 AM
புதுச்சேரி: நெட்டப்பாக்கம் கொம்யூன பஞ்சாயத்திற்குட்பட்ட மலட்டாறு கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஆணையர் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தனுார் அணையில் நீர் வரத்து பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து நேற்று மாலை 6:00 மணியளவில் வினாடிக்கு 9,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் நீர் தென்பெண்ணை ஆறு வழியாக செல்கிறது. தென் பெண்ணையாற்றின் கிளை ஆறான மலட்டாறு பகுதியில் நெட்டப்பாக்கம், பண்ட சோழநல்லுார், வடுகுப்பம், ஏம்பலம், கம்பளிகாரன்குப்பம், நத்தமேடு ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் மலட்டாறு கரையோரம் உள்ள தங்களது உடைமைகள், கால்நடைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவும் ஆற்றங்கரையை கடக்கவும் கூடாது. மீறுவோர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.