உணவு பாதுகாப்பு சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்
புதுச்சேரி: தீபாவளியை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு சட்டங்களை முறையாக பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் செய்திக்குறிப்பு; தீபாவளி பண்டிகைக்காக தற்காலிகமாக மண்டபங்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெறுவதும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் உணவு உரிமம் பெற்றிருப்பதும் கட்டாயமாகும். அனைத்து உணவுத் தொழில் நிறுவனங்களும் தங்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அனுமதி பதிவு சான்றிதழை காட்சிப்படுத்த வேண்டும். நல்ல சுகாதார பழக்கங்களை பின்பற்றிட வேண்டும். தீபாவளியை முன்னிட்டு, உணவு மற்றும் மருந்துகள் ஆய்வகத் துறை கடந்த 1ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகிறது. பொதுமக்கள் மற்றும் உணவு தொழில் நிறுவனங்கள் சுற்றுப்புற பாதுகாப்பை மேம்படுத்த, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். விதிமீறல்களை தெரிவிக்க 1031 (அ) 1071 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.