புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வெளிநாட்டு மாணவர்கள் வருகை
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக வெளிநாட்டு மாணவர்கள் வருகை தந்துள்ளனர். புதுச்சேரி பல்கலைக்கழகம், பல சர்வதேச பல்கலைக்கழங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது. இதன் மூலம் மாணவர் பரிமாற்றத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் ஒரு செமஸ்டரை வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து, அங்கு பெறப்பட்ட கல்வி மதிப்பெண்களை தங்கள் சொந்த பல்கலை கழகத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் சர்வதேச பரிமாற்ற திட்ட மாணவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்தது. பல்கலைகழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் பாந்தியன்சோர்போன் பல்கலைக்கழகம், டூர்ஸ் பல்கலைக்கழகம், கிழக்கு பாரிஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐரோப்பாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை சேர்ந்த 7 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் சூழலியல், பயன்பாட்டு உளவியல், கணிதம் ஆகிய துறைகளிலும், பாந்தியன்சோர்போன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும். இரட்டை படிப்பான ‘எம்.ஏ. சீல்’ படிப்பின் செமஸ்டர் பருவத்தை மேற்கொள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர். இந்நிகழ்வை சர்வதேச உறவுகள் துறை தலைவர் விக்டர் ஆனந்த்குமார் ஒருங்கிணைத்தார். சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பாவில் உள்ள கல்வி சார் கூட்டாண்மை பல்கலைக்கழங்களில், ஒரு செமஸ்டர் பருவ கால கல்வி பயில புதுச்சேரி பல்கலை கழத்தை சேர்ந்த 18 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.