புதுச்சேரிக்கு ஒரே நாளில் 2,343 பறவைகள் வருகை வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரியில் வனத்துறை மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்பில் ஒரு நாளில், 86 வகையை சேர்ந்த 2,343 பறவைகள் வந்து செல்வது தெரிய வந்துள்ளது.புதுச்சேரி வனத்துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் பிராந்தியத்தில் உள்ள 84 ஏரிகளில் மிகப் பெரிய ஏரியான ஊசுடு, பாகூர் ஏரிகள் மற்றும் அரியாங்குப்பம் அலையாத்தி காடு ஆகிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தினசரி எத்தனை வகையான பறவைகள், எங்கிருந்து வருகின்றன. அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பறவை ஆராய்ச்சியாளர் பூபேஷ் குப்தா தலைமையில் கணக்கெடுப்பு நடத்தினர். இந்த கணக்கெடுப்பின் அறிக்கையை வனத்துறை பாதுகாப்பு அதிகாரி அருள்குமார் நேற்று வெளியிட்டார்.அதில், ஒரு நாளில் 38 குடும்பங்களை சேர்ந்த 86 வகைகளை சேர்ந்த 2,343 பறவைகள் வந்து செல்வது தெரிய வந்துள்ளது. பறவைகள் வருகை காரணமாக நீர் நிலைகளில் மீன்களின் பெருக்கம் சமன் படுத்தப்படுவதோடு, நீரின் தரமும் மேம்படுகிறது.பறவைகளில் பிளமிங்கோ, பூ நாரை, கூழைக்கடா, அருவாள் மூக்கான், கர்னுாள், பாம்புதாரா, ஆளா போன்றவை புதுச்சேரிக்கு அதிகம் வருகின்றன. பறவைகள் முக்கிய தங்கும் இடமாக ஊசுட்டேரி உள்ளது தெரிய வந்துள்ளது.புதுச்சேரியில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பறவைகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இனி வரும் காலங்களில் பறவைகள் கணக்கெடுப்பை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்த வேண்டும் என, பறவை ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.