கவர்னர் - முதல்வர் இடையே பனிப்போர் மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி: கவர்னரை மாற்ற வேண்டுமென மத்திய அமைச்சரிடம், முதல்வர் ரங்கசாமி தெரிவித்தாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.அவர், கூறியதாவது:காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக காங்., எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் தரவேண்டும்.பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற காங்., கோரியுள்ளது போல், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் கோரியுள்ளனர். புதுச்சேரி அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லாமல், சி.பி.ஐ., விசாரணை கோரியதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளிக்க வேண்டும்.புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானங்கள் பிடிக்கப்பட்டு, வில்லியனுார் அடுத்த உளவாய்க்காலில் தயாரிப்பு இடத்தையும் தமிழக போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த இடம் அமைச்சர் ஒருவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடம். ஏற்கனவே அந்த இடத்தில் 7 டன் சந்தனக்கட்டை பிடிப்பட்ட வழக்கும், தற்போது போலி மதுபானங்கள் தயாரிப்பு வழக்கும் உள்ளதால், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.தற்போது, மாநில அந்தஸ்து கோருவது முதல்வரின் கபடநாடகம். அவர் உண்மையாக மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்க விரும்பினால், மாநில அந்தஸ்து தராவிடில் பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என கூற, அவருக்கு தெம்பு, திராணி இல்லை. புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், கவர்னர் கைலாஷ்நாதனை மாற்ற வேண்டுமென கூறியுள்ளார். ஆனால், அதற்கு மத்திய அமைச்சர் மாற்ற முடியாது என்று தெரிவித்து விட்டார். இதனால், கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளது.வரும் ஆகஸ்ட்டில் புதுச்சேரி ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் புகார் தரவுள்ளோம்' என்றார்.