| ADDED : மார் 08, 2026 04:28 AM
புதுச்சேரி: இலவசம் என்பது வளர்ச்சி அல்ல, அது வெறும் கவர்ச்சி என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், புதுச்சேரியில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் தலா 14 ஆண் மற்றும் 14 பெண் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாட்டில் தற்போது அரசியல் செய்பவர்கள் ஊழல், லஞ்சத்தின் பக்கம் நிற்கிறார்கள். ஆனால், நாங்கள் எப்போதும் உண்மையின் பக்கம் மட்டுமே நிற்போம். அவர்களுக்கு ஓட்டுதான் கவலை. எங்களுக்கு மக்களின் வாழ்க்கைதான் கவலை. தனி மனிதன் கையேந்தினால் அது பிச்சை; ஒரு நாடே கையேந்தினால் அது இலவசம் வறுமையை ஒழிக்காமல், இலவசங்களைக் கொடுப்பது வளர்ச்சி அல்ல. இது வெறும் ஓட்டுக்கான கவர்ச்சி திட்டம். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியே ஓவர்.. இதில் 2.0 வேறா? பீகாரில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தது போல், இங்கு ஸ்டாலின் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம், இதுக்கு ஒரு 5 ஆயிரம், ஓட்டுக்கு 2 ஆயிரம் எனத் தவணை முறையில் பிரிக்கிறார். 5 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு லட்சக்கணக்கில் கடனைச் சுமத்துகின்றனர். இந்த முறையை ஒழிக்க வேண்டும். நமது மீனவர்கள் நிம்மதியாகக் கடலுக்குச் செல்ல முடியவில்லை. கச்சத்தீவைத் தாரைவார்த்தது இதே காங்.,தான். அவர்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள்தான் இன்று ஆளுகிறார்கள். இன்னொருவர் (விஜய்) எதற்கு வந்திருக்கிறார் என்றே தெரியவில்லை. புதுச்சேரியைத் தனி மாநிலமாக்க 16 முறை தீர்மானம் போட்டும் பலனில்லை. புதுச்சேரியை காங்., ஆண்டது, இப்போது பா.ஜ., கூட்டணியில் ரங்கசாமி ஆள்கிறார். ஆனால் உரிமை கிடைக்கவில்லை. மாகி, ஏனாம் இல்லாத தனி மாநிலமாக புதுச்சேரியை அறிவிக்க வேண்டும். அரசியலைத் தொழிலாக மாற்றிவிட்டனர். ரூ.2 அல்லது 3 கோடி இருந்தால் புதுச்சேரியில் ஒரு தொகுதியை வாங்கிவிடலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், புதுச்சேரியில் மக்களுடன் இருக்கும் 3-வது பெரிய கட்சி நாம் தமிழர் தான். நிச்சயமாக இந்த தேர்தலில் முதலிடம் பிடிப்போம் என்றார். இ-உண்டியல் பொதுக்கூட்டத்தில், கட்சி நிதிக்காக இ-உண்டியல் மூலம் வசூலிக்கப்பட்டது. இதற்காக தொண்டர்கள் பிளாஸ்டிக் குடங்களை எடுத்துச் சென்று குலுக்கினர். அந்த குடத்தில் 'கியூ ஆர் கோடு' ஓட்டப்பட்டிருந்தது. அதனால், கையில் பணம் வைத்திருந்தவர்கள் குடத்தில் பணத்தை போட்டனர். பணம் கையில் இல்லாதவர்கள் தங்கள் மொபைல்போனை கொண்டு, குடத்தில் ஒட்டியிருந்த 'கியூஆர் கோடை' ஸ்கேன் செய்து நிதியை செலுத்தினர்.