உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புறவழிச்சாலையில் மீண்டும் குப்பைகள் கொட்டும் அவலம்

 புறவழிச்சாலையில் மீண்டும் குப்பைகள் கொட்டும் அவலம்

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம், புறவழிச்சாலையில், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் குப்பைகள் கொட்டும் அவலம் தொடர்கிறது. அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் பலர், குப்பையை கொட்டி வந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக, குப்பை கொட்டுவதை படம் பிடித்து அனுப்பினால், ரூ.2,000 சன்மானம் வழங்கப்படும் என உழவர்கரை நகராட்சி அறிவித்தது. மேலும், சாலையின் இருபுறமும், குப்பை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சியினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், புறவழிச்சாலையில், குப்பை கொட்டிய டாடா ஏஸ், லாரி மீது பொது இடத்தில் குப்பை கொட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளில் முதலியார்பேட்டை போலீசார், வழக்கு பதிந்து, பறிமுதல் செய்தனர். இந்நிலையில் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை பகுதிகளில் மட்டும் குப்பை கொட்டுவது கட்டுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை வில்லியனுார் கொம்யூனுக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கொம்யூன் அதிகாரிகள் இந்த புறவழிச்சாலையில் குப்பை கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !