அரசு விரைவு பஸ் - லாரி மோதல் லாரி டிரைவர் பலி: 40 பயணிகள் காயம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே லாரி மீது, அரசு விரைவு பஸ் மோதி கவிழ்ந்த விபத்தில் லாரி டிரைவர் இறந்தார். பஸ் பயணிகள் 40 பேர் படுகாயமடைந்தனர். மார்த்தாண்டம், கொல்லன்விளை கிராமத்தை சேர்ந்தவர் பென்சிகர், 51; அரசு விரைவு பஸ் டிரைவர். இவர், ஏப்ரல் 28 ஆம் தேதி பயணிகளுடன் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அதிகாலை 4:00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சலாவாதி புறவழிச்சாலை கூட்ரோட்டில் வந்தபோது, அந்த சாலையில் திரும்புவதற்கான நின்றிருந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை வலதுபுறமாக திருப்ப முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் தடுப்புக் கட்டையில் மோதி பக்கவாட்டு சாலையில் பாய்ந்து எதிரே ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு தைலமரம் ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே லாரி டிரைவரான வானுார் தாலுகா, கிளியனுார் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சக்திவேல், 28; இறந்தார். மேலும், சாலையில் கவிழ்ந்த அரசு விரைவு பஸ்சில் வந்த 40 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த ரோஷணை போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிசெல்வம் தலைமையிலான தீயணைப்பு நிலையத்தினர் காயமடைந்த அரசு பஸ் டிரைவர் பென்சிகர் உட்பட அனைவரையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பென்சிகர் உட்பட 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கூட்ரோட்டில் பேரி கார்டு வைக்காததால் விபத்து விபத்து நடந்த இடம், திருவண்ணாமலை, சென்னை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் கூட்ரோடாக உள்ளது. ஒரே சமயத்தில் கூட்ரோட்டை பல்வேறு மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கடப்பதால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் 'தினமலர்' நாளிதழில் கூட்ரோட்டில் நான்கு பக்கமும் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரி கார்டு வைக்க வேண்டும் என படத்துடன் செய்தி வெளியானது. இதை நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரோஷணை போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். தற்போது அதே கூட்ரோட்டில் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக பலியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.